எஸ்.கைலாசபுரம் ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டம்
எஸ்.கைலாசபுரம் ஆலயத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
சினாட் சார்பில் தென்னிந்திய திருச்சபையின் விதிகளில் போதகர்களின் வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தவும், , திருமண்டல உறுப்பினர்கள் மீது புகார் வந்தால் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட புதிய தீர்மானங்கள் கொண்டு வருவதற்காக பல்வேறு பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் சினாட் சார்பில் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த கூட்டம் நடத்த கோவில்பட்டி உதவி கலெக்டர் தடை விதித்து, நிர்வாக அலுவலர் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று காலையில் எஸ்.கைலாசபுரம் தேவாலயம் முன்பு திரண்டனர். பின்பு தேவாலயம் உள்ளே அமர்ந்து போதகர்களின் வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தவும், திருமண்டல உறுப்பினர்கள் மீது புகார் வந்தால் விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட புதிய தீர்மானங்களை நீக்க வேண்டும். கூட்டத்தை நடத்தாமல், கூட்டம் நடத்தப்பட்டதாக முறைகேடாக பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதிஅளித்தனர். இதனால் அனைவரும் கலந்து சென்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்படுத்தியது.