சேலம் ஜங்ஷனில் ரெயில் போக்குவரத்தை சீர்படுத்த பாதையை முழுவதும் மாற்றியமைக்கும் பணி தீவிரம்


சேலம் ஜங்ஷனில் ரெயில் போக்குவரத்தை சீர்படுத்த பாதையை முழுவதும் மாற்றியமைக்கும் பணி தீவிரம்
x

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் பாதையை முழுவதுமாக மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சேலம்

சூரமங்கலம்:

இருவழிப்பாதை

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் மேட்டூர் அணை-ஓமலூர் வரை இருவழிப்பாதை திட்டம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இந்த பாதையில் மின் வழித்தடமாகவும் மாற்றி ரெயில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டது,

இந்த திட்டத்தில் ஓமலூர்-சேலம் ஜங்ஷன் வரையிலான பகுதியில் இருவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய யார்டு பகுதியில் ரெயில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் தண்டவாளத்தை முழுவதுமாக மாற்றியமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இந்த பணி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

ரெயில்கள் ரத்து

இந்த பணிக்காக 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 30-க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. யார்டு பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில், பாதை மாற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதனால், சில ரெயில்களை ரெயில் நிலையத்தில் அதிக நேரம் நிறுத்தி வைக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இவை அனைத்தையும் களைந்து, புதிய யார்டுகளை ரெயில்வே பொறியியல் பிரிவு அமைக்கிறது. இதன்மூலம் ஈரோட்டில் இருந்து வரும் சரக்கு ரெயில், நேரடியாக ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இயக்கப்படும். பாதை மாற்றத்தை திறம்பட மேம்படுத்துவதன் மூலம் இனி மேல் ரெயில் போக்குவரத்து எளிமையாகும். ரெயில்கள் தாமதமின்றி விரைந்து இயக்கப்படும்.

பணிகள் தீவிரம்

ஜோலார்பேட்டை மார்க்கம், பெங்களூரு மார்க்கம், ஈரோடு மார்க்கம், நாமக்கல் மார்க்கம் என 4 புறங்களில் இருந்து வரும் ரெயில்களும், எவ்வித சிரமமும் இன்றி சீரானமுறையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.

அதேபோல், சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் சரக்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டு அதில் இருந்து சரக்குகள் ஏற்றி, இறக்கப்படுகிறது. தற்போது அங்கு கூடுதலான 21 ரெயில் பெட்டிகள் நிற்கும் வகையில், அந்த பிளாட்பார்ம் நீளமாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம் சரக்கு கையாள்வதில் இருந்த பிரச்சினை தீர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் யார்டில் நடக்கும் இந்த பணியை நாளை மாலைக்குள் முடிக்க பொறியியல் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இடைவிடாது தண்டவாளங்களை பெயர்த்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story