சத்தியமங்கலம் கூத்தம்பாளையத்தில்அரசு பள்ளிக்கூட மாணவர்களின் வாசிப்பு திறனை சோதனை செய்த கலெக்டர்


சத்தியமங்கலம் கூத்தம்பாளையத்தில்அரசு பள்ளிக்கூட மாணவர்களின் வாசிப்பு திறனை சோதனை செய்த கலெக்டர்
x

சத்தியமங்கலம் கூத்தம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறனை சோதனை செய்தார். அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

ஈரோடு

சத்தியமங்கலம் கூத்தம்பாளையம் அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறனை சோதனை செய்தார். அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

கலெக்டர் சோதனை

ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்கள், ஊராட்சி பகுதிகளுக்கு நேரில் சென்று அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் முறையாக நடந்து வருகிறதா என்று சோதனை செய்து வருகிறார்.

அதன்படி நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலைக்கிராமங்களான குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம், குன்றி கிராமங்களில் நடந்து வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

உயர்மட்ட பாலங்கள்

குத்தியாலத்தூர் ஊராட்சி கடம்பூர்-மாக்கம்பாளையம் ரோடு, குத்தியாலத்தூர் பள்ளம் ஓடையின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

இதுபோல் சர்க்கரை பள்ளம் ஓடையில் ரூ.3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் உயர் மட்டபாலம், அரிகியம் மேலூர் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகளையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு சோதனை செய்தார். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அவர் விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

சோதனை

கூத்தம்பாளையம் ஊராட்சி கோம்பை தொட்டி பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சமத்துவ மயானம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கான அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கல்கள் தரமானதா என்று சோதனை செய்யும் வகையில் செங்கலை கையில் எடுத்து கீழே போட்டு சோதனை செய்தார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

கோம்பை தொட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்துக்கு சென்ற கலெக்டர் ராஜகோபால் அங்குள்ள வகுப்பறைகளுக்குள் நுழைந்து, மாணவ-மாணவிகளுடன் சகஜமாக கலந்துரையாடினார். சிறுவர்-சிறுமிகள் சூழ்ந்து கொள்ள, அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டார்.

அவர்கள் கூறிய பதில்களை கேட்டும் மகிழ்ந்தார். மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறனை தெரிந்து மேம்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளின் இருக்கை அருகே சென்று அவர்கள் வைத்திருந்த பாடப்புத்தகத்தில் இருந்து வாசிக்க கூறினார். அவர்களும் வாசித்து காட்டியதால் மகிழ்ச்சி அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அறிவுரைகள் வழங்கி பேசினார்.

சுகாதார நிலையம்

பின்னர் அவர் குன்றி ஊராட்சி கோவிலூரில் கட்டப்பட்டு வரும் 32 தொகுப்பு வீடுகள், குத்தியாலத்தூர் ஊராட்சி அணைக்கரையில் கட்டப்படும் அங்கன்வாடி மற்றும் சமையல் அறை கட்டிடங்களையும் பார்வையிட்டு, கட்டுமான பொருட்கள் தரமாக உள்ளதா என்றும் சோதனை செய்தார். கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற கலெக்டர், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் மற்றும் நோயாளிகளிடம் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி அப்துல்வகாப், ஊராட்சி தலைவர் சந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story