ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியின் 49- வது பெற்றோர் தின விழா இராச கோபாலன் கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் அவரது கணவர் அபிஷேக் டோபர்ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். விழாவில் பள்ளி தலைவர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன் நகரியத்தின் முதல் பெண்மணி அகிலா ராமகிருஷ்ணன், சி.ஓ.ஓ. பாலு, பள்ளிச் செயலர் பிரேம் சுந்தர் தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆணையாளரின் கருத்துக்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துவதாகவும், விடாமுயற்சியோடு செயல்பட்டால் அனைத்தையும் வெல்லலாம் என்பதை நினைவூட்டும் விதமாக அமைந்தது. இறை வழிபாட்டோடு விழா தொடங்கியது. மாணவி சக்தி தேவி மாணவி ஹேமா சிறப்பு விருந்தினரின் தனித்துத்தை அவர்கள் உரையின் மூலம் வெளிப்படுத்தினர். விழாவில் மாணவ- மாணவியர்கள் இணைந்து அனைவரையும் வரவேற்று பாடல் பாடினர். பரதத்திற்கு பதில் சொல்லும் கதக் என்று மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து நம் பண்பாட்டை நாட்டியத்தின் மூலம் பறை சாற்றினர். முகம் காட்டாமல் அனைவரின் முகத்தில் மகிழ்ச்சியை காட்டிய ஜோக்கர் நடனமும், வள்ளல்களின் சிறப்புகளை தன் நாடகத்தின் மூலம் விளக்கி இன்னல்களில் உதவி புரியும் அனைவருமே வள்ளல்களே என்று விளக்கிய தமிழ் நாடகமும், பெற்றோரை பாதுகாத்தல் என்னும் ஆங்கில நாடகமும் மாணவர்களின் மேற்கத்திய நடனம் நடைபெற்றது. மேலும் மாணவர்களின் கனவு என்பது லட்சியத்தை நோக்கிய பயணம் அதை சரியாக வழி காட்டினால் அவன் வெற்றி பெறுவதற்கு நிச்சயம் என்பதையும் நவீன நாடகத்தின் வழியில் நடித்து காட்டினர். அதனைத் தொடர்ந்து வட இந்திய கிராமிய நடனங்களை மாணவிகள் வெளிப்படுத்தினர். முடிவில் மாணவி நித்ய அஸ்வினி நன்றி கூறினார். நாட்டுப் பன்னுடன் விழா நிறைவடைந்தது.