தமிழக பன்னாட்டு விமான நிலையங்களில்கொரோனா பரிசோதனை தொடங்கியது
தமிழக பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தொடங்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்றே தொடங்கி விட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அரசு எச்சரிப்பதற்கு முன்பாகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்தில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள மருந்துகள் கையிருப்பு, படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார். வெளிநாடுகளில் குறிப்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், அந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
விமான நிலையங்களில் பரிசோதனை தொடங்கியது
இதற்கிடையே சீனா, ஜப்பான், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை ரேண்டமாக 2 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை வசதி உள்ளது. எனவே, அங்கு வருபவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் போன்றவை இருந்தால் அவர்களை பரிசோதனை செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் இன்று (அதாவது நேற்று) முதல் கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் தயார் நிலை
தமிழகத்தில் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. படுக்கைகளை பொறுத்தவரை கடந்த கொரோனா காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் கடந்த கொரோனா காலத்தில் தமிழகத்தில் கூடுதலாக 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளை அமைக்க முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்தார். அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கான படுக்கைகள், குழந்தைகளுக்கான சிறப்பு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. அவைகள் அனைத்துமே தயார் நிலையில் உள்ளன. அதுபோல ஆக்சிஜனை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.
எனவே, யாரும் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தற்போது பரவி வருவது ஒமைக்ரானின் ஒரு வகையை சேர்ந்த உருமாற்ற வைரஸ் ஆகும். தமிழகத்தில் ஏற்கனவே ஒமைக்ரானில் பல வகை உருமாற்றத்தை சந்தித்திருக்கிறோம். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாகவே முதல்-அமைச்சர் மாற்றியதன் விளைவாக 96 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 92 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர்.
முககவசம், சமூக இடைவெளி
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களாக கொரோனாவால் இறப்பு ஏதும் இல்லை என்ற நிலை நீடித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் தான் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, மிகவும் பாதுகாப்பான நிலையில் தமிழகம் இருந்து வருகிறது.
கொரோனா விதிமுறைகள் என்பது ஏற்கனவே நடைமுறையில் தான் உள்ளது. கூட்டங்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் பாதுகாப்புக்காக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற விதிமுறைகளை கடைபிடித்தால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.