தலமலை வனச்சாலையில் பஸ்சை வழிமறித்த ஒற்றை யானை
தலமலை வனச்சாலையில் பஸ்சை ஒற்றை யானை வழிமறித்ததது.
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஜீர்கள்ளி, தலமலை உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், சாலையில் உலா வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தலமலை வனப்பகுதியில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையில் நேற்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தலமலையை அடுத்த மாவனத்தம் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென அந்த பஸ்சை வழிமறித்தது. யானையை கண்டதும் டிரைவர் அப்படியே பஸ்சை நிறுத்தினார். யானையானது வனச்சாலையில் அங்கும் இங்குமாக உலா வந்தபடி இருந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் யானை அங்கிருந்து சென்றது. இதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக தலமலை வனச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.