தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் மோதல்-தள்ளுமுள்ளு நாற்காலிகள் வீசப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நடந்தது. நாற்காலிகளை தூக்கி வீசினர். கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காங்கிரஸ் உள்கட்சி தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நடந்தது. நாற்காலிகளை தூக்கி வீசினர். கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கேரள மாநில காங்கிரசை சேர்ந்த வளசலன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 3 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கட்சியை வலுப்படுத்த வேண்டும்
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 'காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொன்னால் மட்டும் போதாது, கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு நல்ல நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்' என்றார்.
அப்போது மகளிர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துவிஜயா எழுந்து அவருக்கு எதிராக பேசினார். 'நடந்து முடிந்த தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் யாருக்கு சீட் கொடுத்தீர்கள். ஒரே வார்டில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் போட்டியிட்டன. இதனை ஏன் நீங்கள் பேசி முடிக்கவில்லை?. இப்படி இருந்தால் கட்சி எப்படி வலுப்பெறும்?' என்றார்.
நாற்காலிகள் வீச்சு
இதைக்கேட்டதும் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எழுந்து, முத்துவிஜயாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதையடுத்து முத்துவிஜயாவுக்கு ஆதரவாக சிலர் எழுந்து பேசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாற்காலிகளை தூக்கி வீசினர்.
உடனே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து முத்துவிஜயா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டனர். இந்த மோதலால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உள்கட்சி தேர்தல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.