மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நேற்று மாலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் வந்தனர். பின்னர் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமையில் பட்டதாரி ஆசிரியர்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான ஊதிய மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டார்.
போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள், பட்டதாரி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.