ஈரோட்டில் நடந்த கண்காட்சியில்450 காங்கேயம் மாடுகள் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த கண்காட்சியில் 450 காங்கேயம் மாடுகள் பங்கேற்றன.
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.இ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று பாரம்பரிய காங்கேயம் கால்நடை கண்காட்சி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கீழ்பவானி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, ஆதிவனம் அமைப்பின் நிறுவன தலைவர் ரகுநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகள் மற்றும் காளைகள் பங்கேற்றன.
மேலும் காங்கேயம் மாடுகள் வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கால்நடை பராமரிப்பு துறையினருடன் சேர்ந்து காங்கேயம் இனத்தில் மயிலை, காரி, செவலை, பிள்ளை என நிறங்களின் அடிப்படையிலும், சிறந்த மாடு மற்றும் காளைகளுக்கு அழகு போட்டி, பல் போடாத காரி கிடாரி, 4 பல் வரை உள்ளவை, பூச்சி காளை, 4 பல்லுக்கு மேல் உள்ளவை, சிறந்த வண்டி எருது உள்பட 20 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டி நடுவர்களாக கால்நடைத்துறை இணை இயக்குனர் பழனிவேல், உதவி இயக்குனர் சேகர், கால்நடை உதவி டாக்டர்கள் சத்தியமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் செயல்பட்டு சிறந்த மாடுகளை தேர்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ரூ.1,000 முதல், ரூ.10 ஆயிரம் வரை பரிசு வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், வக்கீல் அணி மாவட்ட தலைவர் துரைசக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு நாட்டு மாட்டு பாதுகாப்பு குழு தலைவரும், ஜல்லிக்கட்டு பேரவை தலைவருமான ஏ.இ.டி. மோகன் செய்திருந்தார்.