கல்வராயன் மலை அடிவாரத்தில் மரங்களை வெட்டி சாய்த்து செம்மண் கொள்ளை
கல்வராயன் மலை அடிவாரத்தில் மரங்களை வெட்டி சாய்த்து செம்மண்ணை கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கையை பாதுகாத்தால் அது நம்மை வாழ வைக்கும் என்பார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையின் நன்கொடையான வனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தல் என்பது, மனிதன் தனக்கு தானே அழிவு பாதையே உருவாக்குவதாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு ஓர் உதராணம் புவி வெப்பமயமாதல். இன்று உலகளவில் பெரும் சவலாக உருவெடுத்து நிற்கிறது. இதனால் மீளவே முடியாத ஒரு பருவநிலை சீரழிவை நோக்கி உலகம் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.
கல்வராயன் மலை
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப நம்மால் முடிந்தவரையில் இயற்கை தந்த கொடையை நெருக்காடியான இந்த காலகட்டத்தில் பாதுகாப்பது என்பது அவசியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக வளங்கள் சுறண்டப்பட்டு வருவதை நாம் கண்கூடாக பல இடங்களில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.அதில், இந்த கல்வராயன் மலையும் விதிவிலக்கு அல்ல.
ஆம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையான கல்வராயன் மலை அமைந்துள்ளது. இந்த மலை எண்ணற்ற நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளுடன் வானுயர்ந்த எண்ணற்றவகையிலான மரங்களை கொண்டதாகும். பசுமைகள் மிகுந்த இந்த வனம் தான், தற்போது சூறையாடப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
கல்வராயன் மலை அடிவாரத்தில் மட்டபாறை, மல்லிகைப்பாடி, கல்படை, பொட்டியம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் மலைஅடிவாரப்பகுதியில், இரவு நேரங்களில் மண் வளங்கள் கொள்ளை அதிகரித்து வருகிறது. இரவில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு செம்மண்ணை லாரிகளில் கொள்ளையடித்து செல்கிறார்கள்.
இவற்றை கச்சிராயபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மலைகளில் உள்ள மரங்கள் மற்றும் மலையின் இயற்கை வளங்கள் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மரங்களும் வெட்டி சாய்ப்பு
இது குறித்து மல்லிகைப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் கல்வராயன் மலையில் இயற்கை வளங்கள், வனவிலங்குகளை பாதுகாக்கத்தான் வனத்துறை உள்ளது. ஆனால் அவர்களது மெத்தனப்போக்கால் இரவு நேரங்களில் மலை அடிவாரப்பகுதிகளில் இதுபோன்ற மண் கொள்ளை நடந்து வருகிறது. சில இடங்களில் மரங்களையும் கொள்ளை கும்பல் வெட்டி சாய்த்து விடுகின்றனர். இயற்கை வளங்களை சூறையாடும் இதுபோன்ற கும்பலை வனத்துறையினர் கண்டும் காணமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது.
சாலை பணிகள்
ஆனால், மலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் நலன் கருதி சாலைகள் அமைத்தல், குடிநீர் தேவைக்கு கிணறுகள் வெட்ட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே பணிகளை தொடங்க முடிகிறது. இன்றும் பல கிராமங்களில் சாலை பணிகளுக்காக வனத்துறையினரின் அனுமதிக்காக காத்திருக்கும் கிராம மக்கள் உள்ளனர்.
ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், செம்மண் கொள்ளை கும்பல்கள் மட்டும் எந்த இடையூறுகளும் இல்லாமல் அவர்களது வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே இந்த பிரச்சினையில் மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்தி, வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு கடிவாளம் போடுவதுடன், இயற்கை வளங்களை பாதுகாக்க தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொிவித்தனர்.