ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில்பெட்ரோல் குண்டு வீச்சு; 3 பேர் கைது


ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில்பெட்ரோல் குண்டு வீச்சு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜவுளிக்கடை உரிமையாளர்

தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் சம்சு பக்கீர் (வயது 35). இவர் தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த வாரம் இவரது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த திரேஸ்புரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜாகீர்கான் (19), முகமது இஸ்மாயில் தவுபிக் (19) ஆகியோர் அந்த வழியாக சென்றவர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை சம்சு பக்கீர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவர்களை மிரட்டிச் சென்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜாகீர்கான் (19), முகமது இஸ்மாயில் தவுபிக் (19) மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த கதிரவன் (19) ஆகியோர் சம்சு பக்கீர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டின் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் பெட்ரோல் குண்டு வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்ததும் சம்சு பக்கீர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததால், 3 பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ஜாகீர்கான், முகமது இஸ்மாயில் தவுபிக், கதிரவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.


Next Story