திருசெந்தூரில் விடுதி உரிமையாளர் வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை


திருசெந்தூரில் விடுதி உரிமையாளர் வீட்டில்   65 பவுன் நகை கொள்ளை
x

திருசெந்தூரில் விடுதி உரிமையாளர் வீட்டில் 65 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் விடுதி உரிமையாளர் வீட்டில் 65 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விடுதி உரிமையாளர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி கலாவதி (வயது 63). இவரது மகன் பாலகுமார். இவர் திருச்செந்தூரில் விடுதி நடத்தி வருகிறார்.

கலாவதி தனக்கு சொந்தமான 45 பவுன் நகைகளை வீட்டின் பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார். பாலகுமார் முதல் மாடியில் உள்ள மேஜை டிராயரில் 20 பவுன் நகைகளை வைத்து இருந்தார்.

65 பவுன் நகை கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கலாவதி தரைதளத்தில் படுத்து தூங்கினார். பாலகுமார் பால்கனி கதவை உள்பக்கம் பூட்டாமல் மாடியில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் பால்கனி வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பூஜை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து 40 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தையும், முதல் மாடியில் மேஜை டிராயரில் இருந்த 20 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அதிர்ச்சி

நேற்று அதிகாலை கலாவதி, பாலகுமார் இருவரும் எழுந்து பார்த்தபோது, பூஜை அறை பீரோ மற்றும் மேஜை டிராயரில் இருந்த 65 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சென்று தடயங்களை சேகரித்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கொள்ளை போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story