உடன்குடியில் விபத்து அபாயத்தில்சாலையோரத்தில் நடந்த வாரச்சந்தையால் அவதி


உடன்குடியில் விபத்து அபாயத்தில்சாலையோரத்தில் நடந்த வாரச்சந்தையால் அவதி
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் விபத்து அபாயத்தில் சாலையோரத்தில் நடந்த வாரச்சந்தையால் வியாபாரிகள்,பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி வாரசந்தை கட்டும் பணி நடபெறும் நிலையில் சாலையோரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாரச்சந்தை

உடன்குடி மெயின்பஜார் நான்கு ரோடு சந்திப்பை ஒட்டி வாரச்சந்தை வளாகம் அமைந்துள்ளது. வாரந்தோறும் திங்கட்கிழமையில் இங்கு வாரச்சந்தை கூடுவது வழக்கம். சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த சந்தை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 2-வது பெரிய வாரச்சந்தை ஆகும். வாரச்சந்தை நாளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சுற்றுப்புறப் பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள், பலசரக்கு உள்ளிட்ட அனைத்து வீட்டுதேவை பொருட்கள் வியாபாரம் நடக்கும்.

சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல ஆயிரத்துக்கு மக்கள் சந்தைக்கு வந்து தங்களது வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வா். குறிப்பாக இந்த சந்தையில் பெண்கள் கூட்டம் அலைமோதும்.

சாலையோரத்தில் கூடியது

எவ்வித அடிப்படை வசதியும் இ்ல்லாமல் செயல்பட்டு வந்த வாரச்சந்தையை புதிய வடிவமைப்பில் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் வார சந்தையின் ஒரு நுழைவு வாசல் பகுதி மூடப்பட்டது. மேலும், வாரச்சந்தை கட்டுமானத்திற்கு இடையே கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலையில் நேற்று வாரச்சந்தையை முன்னிட்டு வியாபாரிகள் உடன்குடி தெற்குபஜாரில் ரோட்டின் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விபத்து அபாயத்தில் பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நிலை காணப்பட்டது. கடை வியாபாரிகளும் விபத்து அச்சத்திலேயே வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கோரிக்கை

வாரச்சந்தை கட்டுமானம் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. எனவே, இந்த பணி முடியும் வரை திங்கட்கிழமை தற்காலிகமாக வேறொரு பாதுகாப்பான இடத்தில் வார சந்தையை நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும். கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story