மரம் அறுக்கும் ஆலையில்திடீர் தீ விபத்து
ஓசூர் அருகே மரம் அறுக்கும் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
ஓசூர்
மரம் அறுக்கும் ஆலையில் தீ
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சொந்தமாக ஓசூர் அருகே உளியாளம் என்ற கிராமத்தில் மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில், நேற்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென ஆலை முழுவதும் பரவியது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆலை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.
போலீசார் விசாரணை
இந்த தீவிபத்தில் ஆலையில் இருந்த, மரம் அறுக்கும் எந்திரம் மற்றும் விலை உயர்ந்த மரங்கள், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீவிபத்து குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.