விளாத்திகுளம் அருகே பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
விளாத்திகுளம் அருகே பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1982 முதல் 1987 வரை படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊர்த்தலைவர் பி.காசிராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் ஆர்.வி.தங்கமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தெய்வேந்திரன் கலந்து கொண்டு பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, முன்னாள் ஆசிரியர்கள் ஆயை, காஜாமைதீன், முத்துசாமி, ஆறுமுகசாமி, தேவி, மீனா, மதுரவள்ளி, ஆறுமுகரத்தினம், கோடீசுவரன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் ஒரே வண்ண சீருடை அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் 49 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதியோர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உணவாக கம்மங்கூழ், நொங்கு, குச்சிஐஸ், பதநீர், குழிபணியாரம், ஆரஞ்சுமிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் இளங்கோ, உஷா சரவணன், பெத்துக்கனி, சந்திரசேகர், சேர்மநாதன், அன்புராஜா, ராமசுப்பிரமணி, லட்சுமி பிரபா ஆகியோர் செய்து இருந்தனர்.