மாநில அளவிலான கலைத்திருவிழாவில் அரசு பள்ளியை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
மாநில அளவிலான கலைத்திருவிழாவில் அரசு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
மாநில அளவிலான கலைத்திருவிழாவில் அரசு பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
கலைத்திருவிழா
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில் நடைபெறவுள்ள கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று மாணவ, மாணவிகள் செல்லும் பஸ்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 300 மாணவ, மாணவிகள் மாநில அளவில் மதுரை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்கின்றனர். இப்போட்டியானது 27 முதல் 30-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அழைத்து செல்கின்றனர்.
பஸ் வசதி
மாணவ, மாணவிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பங்கேற்றுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பத்மகுமார், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைப்பு அலுவலர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.