திருப்புவனத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் பெயர்ந்து விழுந்தது

பலத்த மழை எதிரொலியால் திருப்புவனத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் பெயர்ந்து விழுந்தது. சிவகங்கையில் வாழைகள் சாய்ந்தன.
திருப்புவனம்,
பலத்த மழை எதிரொலியால் திருப்புவனத்தில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் பெயர்ந்து விழுந்தது. சிவகங்கையில் வாழைகள் சாய்ந்தன.
பலத்த மழை
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதில் சிவகங்கை நகரில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சிவகங்கையை அடுத்த குமாரபட்டி, பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் விளைச்சலுக்கு தயாரான நிலையில் இருந்த வாழைகள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.
வாழைகள் சேதம்
இதுகுறித்து குமாரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தம் (வயது 59) கூறும் போது,
குமாரப்பட்டியில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டுள்ளேன். உழவு, வாழை நடவு, களை எடுத்தல், உரமிடுதல், பராமரிப்பு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகி உள்ளது.தற்போது விளைச்சலாகி நல்ல பலன் தரும் தருவாயில் வாழை மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் வாழைகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகை பெற்றுத் தர வேண்டும் என்றார்.
பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
திருப்புவனத்தில் இருந்து-மேலூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 1800 மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்ல மெயின்ரோட்டில் இருந்து பள்ளி வரை இருபுறமும் காம்பவுண்டு சுவர் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. காம்பவுண்டு சுவரின் வடபுறம் புதிதாக கட்டப்பட்ட தெப்பகுளம் உள்ளது. தெப்பகுளத்தில் நான்கு புறமும் நடைபயிற்சிக்காக பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருபுறம் உள்ள நடைபாதை பள்ளிக்கூட வடக்கு காம்பவுண்ட் சுவருடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 8 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் வடபக்க சுற்றுச்சுவர் சுமார் 40 அடி தூரம் இடிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் அதை புதுப்பித்து கட்டாமல் இடிந்துவிழுந்த இடத்தின் அருகே இரும்பு கம்பி வலையை கொண்டு நீளமாக வேலி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வடக்கு காம்பவுண்ட் சுவர் சுமார் மேலும் 50 அடி தூரம் இடிந்து விழுந்து இரும்பு கம்பி வலையுடன் கீழே போட்டு அமுக்கியுள்ளது. பள்ளி முடிந்து இரவு நேரத்தில் விழுந்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் பள்ளி மாணவிகள் அச்சத்துடனே அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இடிந்து விழுந்துள்ள காம்பவுண்டு சுவரை பலமாக கட்டியும் மீதமுள்ள சுவர் இடிந்து விழாமல் இருக்க தேவையான நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையளவு
நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகங்கை 68.40
மானாமதுரை 40
திருப்புவனம் 100.80
காரைக்குடி 2
காளையார் கோவில் 8.40
சிங்கம்புணரி 20
மாவட்டத்தில் குறைந்த அளவாக காரைக்குடியில் 2 மில்லி மீட்டரும் மிக அதிக அளவாக திருப்புவனத்தில் 100.80 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.