விருத்தாசலம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


விருத்தாசலம் நகரமன்ற கூட்டத்தில்  அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணை தலைவர் ராணி தண்டபாணி, நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பி.ஜி.சேகர், தீபா, பாண்டியன், அருண், பி.ஆர்.சி. சந்திரகுமார், ராஜேந்திரன், சிங்காரவேல், குமாரி, குணசுந்தரி, ராஜ்குமார், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள குறைகளை கூறிக் கொண்டிருந்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர் பி.ஆர்.சி. சந்திரகுமார், தீர்மான நகலில் உள்ள குறைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன என கூறி விட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து சென்றனர்.

உள்ளிருப்பு போராட்டம்

தொடர்ந்து பா.ம.க. கவுன்சிலர் சிங்காரவேல், விருத்தாசலம் தொகுதி அனாதையாக கிடக்கிறது. தொடர் திருட்டுகள் நடந்து வருகிறது. அரசு பணிகள் நடக்கவில்லை. அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது நகரமன்ற தலைவரும், நகராட்சி ஆணையாளரும் திடீரென எழுந்து சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் தங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி ஆணையாளரும் நகர மன்ற தலைவரும் மீண்டும் நகர சபைக்கு வரக்கோரி கோஷம் எழுப்பினர். இதையடுத்து சிறிது நேரத்தில் நகர மன்ற தலைவரும், நகராட்சி ஆணையாளரும் மீண்டும் நகர சபைக்கு வந்தனர். ஆனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் சபைக்கு வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story