தேனி தொழிற்பேட்டையில் பிணமாக கிடந்த இரும்பு வியாபாரி
தேனி தொழிற்பேட்டையில் ரத்த வெள்ளத்தில் இரும்பு வியாபாரி பிணமாக கிடந்தார்.
தேனி பாரஸ்ட்ரோடு 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 52). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், தேனி தொழிற்பேட்டை வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அவருடைய உடல் குப்புற கிடந்தது. அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்தில் படிந்து இருந்தது. அவருடைய ஒரு காலில் செருப்பு அணிந்த நிலையிலும், மற்றொரு செருப்பு காலுக்கு அருகிலும் கிடந்தது. அவருடைய இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருடைய அண்ணன் டேவிட்ராஜேந்திரன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.