திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்


திருச்செந்தூர்சுப்பிரமணிய சுவாமி கோவிலில்  குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்து, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்து, 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அய்யப்ப பக்தர்கள் வருகை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் மாதம் கார்த்திகை முதல் நாளான கடந்த 17-ந் தேதி முதல் கோவில் வளாகத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநில அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிக அளவு காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்களும் ஏராளமான வாகனங்களில் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கார், வேன்களில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர்.

3 மணி நேரம் காத்திருந்து...

தங்களது குடும்பத்துடன் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி 100 ரூபாய் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிக அளவு காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபரதனையும், 5 மணிக்கு உதயமார்தண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

போக்குவரத்து நெரிசல்

நேற்று பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரித்ததை தொடர்ந்து திருச்செந்தூரில் வாகன நெரிசலும் காணப்பட்டது. அதிகாலை முதல் கோவில் கடற்கரை பகுதியில் வாகனங்கள் சென்று வரமுடியவில்லை. இதை தொடர்ந்து காலை 8 மணி முதல் அனைத்து வாகனங்களும் கீழரதவீதியில் இருந்து தெற்கு ரதவீதி திருப்பி விடப்பட்டன. அங்கு பக்தர்களை இறக்கி விட்டு விட்டு வாகனங்கள் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரசு பஸ்களில் வந்த பக்தர்களும் தெற்கு ரதவீதியில் இறக்கி விடப்பட்டு புதிய பஸ்நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.


Next Story