தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில்கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்
தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரையில் கடல் ஆமை 100 முட்டையிட்டு உள்ளது. அப்பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடல் ஆமை
கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடல் ஆமைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, பச்சை ஆமை மற்றும் தோணி ஆமை ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன. கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும். அதன்படி தற்போது ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.
மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில் குறிப்பாக மணப்பாடு, பெரியதாழை கடற்கரையிலும், புன்னக்காயல் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதியிலும், கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலும், மூக்கையூர், சேதுக்கரை பகுதியிலும் ஆமைகள் முட்டையிட்டு வந்தன.
முட்டை
இந்த நிலையில் தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையை சேர்ந்த பாலுமகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் ஒரு குழியில் சுமார் 100 முட்டைகள் இடப்பட்டு இருந்தன. இதனை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். தூத்துக்குடி கடல் பகுதியில் ஆமை முட்டையிட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.