திருச்செந்தூர் நகராட்சி பூங்காவில்அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க கோரிக்கை
திருச்செந்தூர் நகராட்சி பூங்காவில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க ஆதிதிராவிடர் பறையர் சமுதாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதிதிராவிடர் பறையர் சமுதாய சங்க அலுவலகத்தில் திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடத்தை தனிநபர் பாதைஆக்கிரமிப்புக்கு ஒப்படைப்பதை கைவிட்டு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்திற்கு சொந்தமான 79 செண்டு பட்டா இடத்தை முழுமையாக ஆதிதிராவிடர் சமுதாய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அவரது சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆதிதிராவிடர் பறையர் சமுதாய மக்கள் வாழும் 94 ஊர்களில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தை புறக்கணித்து ஊர் முகப்பில் விளம்பர பதாகைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தமிழக முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், சங்க சட்ட ஆலோசகர் ராஜ்குமார், உடன்குடி நகர பஞ்சாயத்து கவுன்சிலர் ராணி, தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் சின்னத்துரை பாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், தோப்பூர் நாகலிங்கம், செந்தாமரை விளை அர்ச்சுனன், மணிமாறன், தமிழ்ப்பரிதி, வேம்டிமுத்து, தேவிகா, மரியபுஷ்பம், சமுத்திரக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.