திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்காணிக்கை நகைகளை உருக்குவதற்காகபிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை நகைகளை உருக்குவதற்காக பிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்குவதற்கு வசதியாக பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது.
பிரித்தெடுக்கும் பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் பயன்பாடற்று இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி, இதை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட உள்ளது. இதற்கு வசதியாக தங்க நகைகளில் உள்ள அரக்கு, அழுக்கு மற்றும் கற்கள் உள்பட பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி நடக்கிறது.
இந்த பணியானது கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி மாலா தலைமையில் தொடங்கியது.
இருப்பு எவ்வளவு?
இதில், இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மண்டல துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான வெங்கடேசன், நகை சரிபார்க்கும் வல்லுனர் குழுவினர் தங்க நகைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்த பின்னர் தான் நகைகள் இருப்பு எவ்வளவு உள்ளது? என்பது தெரியவரும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.