திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்சண்முகவிலாசம் மண்டபத்தில்தடுப்புகளை அகற்ற கோரிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகவிலாசம் மண்டபத்தில் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக்கிடம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் சண்முகநாத அய்யர் ஆகியோர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள சண்முகவிலாசம் மண்டபத்தை சுற்றி தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பை அகற்ற வேண்டும். அகற்றினால் தான் பக்தர்கள் அந்த மண்டபம் முன்பு நின்று சுவாமி சண்முகரை தரிசனம் செய்வதுடன், பக்தர்கள் நேர்திக்கடன் செலுத்த முடியும். கோவில் உதயமார்த்தாண்டம், உச்சிகால பூஜை, சாயரட்சை காலங்களில் சைரன் மீண்டும் ஒலிக்க ஆவண செய்ய வேண்டும். கோவில் வளாகத்தில் 24 தீர்த்த கட்டங்கள் உண்டு. அதில் கந்தபுஷ்கரணி என்றழைக்கப்படும் நாழிக்கிணறு தீர்த்தம் மற்றும் துர்க்கா தீர்த்தம் தெரியும்படி உள்ளது. மற்ற தீர்த்த கட்டங்கள் அடங்கிய விபரங்கள் கல்வெட்டு வைத்திட வேண்டும். கோவில் பிரகாரம் உருவாக்கிய மூவர் சமாதி மற்றும் வள்ளிநாயகம் சமாதி ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். சரவணபொய்கையை புதிய பொலிவுடன் அமைத்திட வேண்டும், என கூறப்பட்டுள்ளது.