திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழிமாத பூஜை நேரம் மாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
தமிழ் மாதமான மார்கழி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
ஆருத்திரா தரிசனம்
ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஆருத்திரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதேபோல் தை பொங்கல் தினத்தன்று (ஜனவரி 15-ந் தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.