திருச்செந்தூரில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பவனி


தினத்தந்தி 22 Aug 2022 8:49 PM IST (Updated: 22 Aug 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆவணி திருவிழா ஆறாம் நாளில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பவனி வந்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா 6-ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் எழுந்தருளி பவனி வந்தார்.

ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.

திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் கோ ரதத்தில் வீதி உலா வந்தார்.

ஆதீன மடத்தில்...

பின்னர் மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு கொடுத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story