திருச்செந்தூர் வீரபாண்டிய கட்டபொம்மன் மடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்
திருச்செந்தூர் வீரபாண்டிய கட்டபொம்மன் மடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி ஜி.பி.காலனியை சேர்ந்தவர் செல்லம் (வயது 55). இவருடைய மனைவி பாஞ்சாலியம்மாள். இவர் வீரபாண்டியன் கட்டபொம்மன் வாரிசு ஆவார். இவர்களுடைய குடும்பத்தினர் திருச்செந்தூரிலுள்ள வீரபாண்டியன் கட்டபொம்மன் மடத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை செல்லம் பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அதே சமுதாயத்தை சேர்ந்த சிலர் கும்பலாக திடீரென்று நுழைந்து செல்லத்தை தாக்கியதுடன், மடத்தை விட்டு வெளியேறுமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மடத்தில் பொருத்தப்பட்டிருந்த 6 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து செல்லம் கொடுத்த புகாரின் பேரில் முருகபூபதி, செந்தில்குமார், சுப்புராஜ், சுந்தர், முருகேசன், வேலுச்சாமி உள்பட 18 பேர் மீது கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.