பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்


பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியில் பால் உற்பத்தியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பால் விலையை உயர்த்தி தரக்கோரி விவசாயிகள் கருப்புக் கொடி மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா எரமசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பால் உற்பத்தி விலையை உயர்த்தி வழங்கவும், ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வாழப்பாடி

வாழப்பாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டம் நடத்தினர். பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசிவிலை உயர்வு தராவிட்டால் வருகிற 17-ந் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டம் நடத்தப் போவதாக பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால் ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு குறைந்த அளவில் பணத்தை கொடுத்து வருகிறது. மாடுகளுக்கு தீவனச்செலவு, பராமரிப்பு செலவு என மூலப்பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு பால் விலை கட்டுபடியாகாத காரணத்தினால் போராட்டம் நடத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த சூழலில் தமிழக அரசு 3 ரூபாய் மட்டும் வெளியே உயர்த்தி கொடுத்தது. ஆனால் நாங்கள் 10 ரூபாய் விலை சேர்த்து கேட்டிருந்தோம். 16-ந் தேதி வரை பால் விலை உயர்வுக்கு எங்களை அழைத்துப் பேசாவிட்டால் 17-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் நிறுத்த போராட்டம் அறிவிக்க உள்ளோம்.

தமிழகம் முழுவதும் உள்ள 9500 பால் கூட்டுறவு சங்க அமைப்பினரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு பால் விலையை உயர்த்தி கொடுத்து பால் உற்பத்தியாளர் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றனர்.


Next Story