விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்பருவ காலத்திற்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமா?


விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்பருவ காலத்திற்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருவ காலத்திற்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் மிக வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்று விருத்தாசலம். அதனால் தான் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒலித்து வருகிறது.

மிகப்பெரிய விற்பனைக்கூடம்

மேலும் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் தான் அமைந்துள்ளது. விருத்தாசலம் மற்றும் அதை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டுச் செல்கின்றனர்.

15 சேமிப்பு கூடங்கள்

அதனால் இங்கு பருவ காலங்களில் தினசரி ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறும். இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 15 சேமிப்பு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு சேமிப்பு கிடங்கும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மேல் தளம் இதுவரை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பல கோடி ரூபாய் அரசு பணம் விரயமாகி உள்ளது. இந்த விற்பனைக்கூடத்தில் பரிவர்த்தனை கூடங்கள், சேமிப்பு கிடங்குகள், ஆய்வகம், பழங்களை சேமித்து வைக்கும் குளிர்சாதனக் கிடங்கு, விவசாயிகள் காத்திருக்கும் கூடம், கழிவறைகள், விளை பொருட்களை தரம் பிரிக்கும் எந்திரம் என அனைத்து வசதிகளுமே ஒருங்கே அமைய பெற்றுள்ளது.

பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள்

இவற்றில் பல செயல்படாமல் பெயரளவுக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வரும் விவசாயிகள் அறுவடை நேரங்களில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம், விளைபொருட்களை உடனுக்குடன் எடை போடுவதில்லை. அதனால் எடை போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

அப்படியே விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்தாலும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்ற பெயரில், இரண்டு மூன்று நாட்கள் பணத்திற்காக காத்திருக்க வேண்டி உள்ளது. இப்படி விவசாயிகள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.

சமூக விரோதிகளின் கூடாரம்

விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட காத்திருக்கும் கூடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படாததால், பெண் விவசாயிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் விற்பனைக்கூட வளாகத்தில் அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர்.

இதனால் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அச்சத்துடனே இரவில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காட்சிப்பொருளான எந்திரங்கள்

இங்கு எவ்வித பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. எந்தெந்த கிடங்கில் என்னென்ன விளை பொருட்கள் விலை போடப்படுகின்றன என தகவல் பலகையும் வைக்கப்படவில்லை. விளை பொருட்களை பரிசோதித்து தரம் பிரித்து கொடுக்கும் எந்திரங்கள் காட்சிப்பொருளாகவே உள்ளது.

மேலும் இங்கு அமைக்கப்பட்ட எடை மேடையும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் விவசாயிகள் தனியார் எடை மேடைகளில் எடை போட்டு விளை பொருட்களை கொண்டு வர வேண்டிய அவல நிலை நிலவுகிறது.

வேளாண் சந்தை திட்டம்

இங்கு வரும் விவசாயிகளுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை அமைந்துள்ளதே தவிர, அதுவும் முறையாக செயல்படுவதில்லை. இங்கு பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவை முறையாக பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் அலுவலகத்தில் உள்ள கேமரா மட்டுமே இயங்கி வருகிறது.

இதனால் வெளிநபர்கள் வருவது கண்காணிக்கப்படாமல் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மற்றொரு பிரச்சினையாக இ-நாம் என்ற தேசிய வேளாண் சந்தை என்ற திட்டத்தின் கீழ் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

கடும் எதிர்ப்பு

இந்த திட்டத்திற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொள்முதல் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தையின்படி தற்போது சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களுக்கு மட்டும் இ-நாம் முறைப்படி கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டம்

ஆனால் அதிக வரத்துள்ள நெல் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களான மணிலா, எள் போன்ற விளைபொருட்களுக்கு இ-நாம் முறை அமல்படுத்தாததால், மறைமுக ஏல முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அறுவடை காலங்களில் மணிலா, எள், நெல் போன்ற பயிர்களுக்கு இ-நாம் முறை மூலம் கொள்முதல் செய்வது மிகவும் கடினம்.

இதில் தொழில்நுட்ப பிரச்சினைகளும் அதிகம் உள்ளது. இப்படி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் இவற்றை வருகிற பருவ காலத்திற்குள் சரி செய்து கொடுத்தால் விவசாயிகள் ஆர்வமுடன் வந்து விளைபொருட்களை விற்பனை செய்வார்கள். நெல் அறுவடை காலங்களில் இ-நாம் முறையில் கொள்முதல் செய்யும் போது வியாபாரிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் கொள்முதல் செய்வதில் பாதிப்புகள் ஏற்படும். இதனை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் மற்றும் இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்து விடுவார்கள். அதனால் விவசாயிகளின் கோரிக்கைகளை பருவ காலத்திற்குள் நிறைவேற்றி தர வேண்டும் என்பதே பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

இ-நாம் முறைக்கு ஆதரவு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சக்திவேல்:- இரண்டு மடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம் என்ற மத்திய அரசின் கொள்கை வரவேற்க வேண்டிய விஷயம். அதில் விவசாயிகள், தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்வதில் உள்ள குளறுபடிகளை கண்டறிந்து இ-நாம் என்ற திட்டத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் இந்தியா முழுக்க இருக்கக்கூடிய வியாபாரிகள் இ-நாம் ஏலத்தில் கலந்து கொண்டு விவசாய தானியங்கள் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு சென்று தேவையான விளை பொருட்களை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும், இதனால் நாங்கள் இ-நாம் திட்டத்தை வரவேற்கிறோம்.

பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் சங்க தலைவர் பழமலை:- விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டும் 30 ஆயிரம் நெல் மூட்டைகள், 3 ஆயிரம் உளுந்து மூட்டைகள், ஆயிரம் கம்பு மூட்டைகள் என தினந்தோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. இ- நாம் திட்டத்தில் இந்த பொருட்களை கொள்முதல் செய்வது மிகவும் கடினம். இங்கு சிறு குறு விவசாயிகள் 5, 10, 20 மூட்டை என கொண்டு வருகின்றனர். அவ்வாறு விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களை அரசு தரம் பிரித்து தரவில்லை. தரம் பிரித்து வழங்காததால் அதனை கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்படும். முக்கியமாக சிறுகுறு விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களை தரம் பிரித்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். 50 வருடமாக மறைமுக ஏல சீட்டு தான் இங்கு நடைமுறையில் இருந்து வந்தது. எந்த வியாபாரி அதிகம் விலை வைக்கின்றார்களோ அந்த வியாபாரியிடம் விவசாயிகள் விற்பனை செய்து விடலாம். அளவுக்கதிகமாக வரத்து வரும்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடினமாக இருக்கும். சிக்னல் கிடைக்காத சமயங்களில் விவசாயிகள் தான் பாதிப்புக்கு உள்ளாவார்கள். புதிய திட்டம் சரிவராது. இந்த திட்டத்தை கைவிட்டு பழைய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு பணி

பரவலூர் விவசாயி நாகராஜன்:- விற்பனைக்கூடத்தில் உள்ள கழிவறைகளை சுகாதாரமாக பராமரித்து தர வேண்டும். கொள்முதல் செய்த விளைபொருட்களை வியாபாரிகள் எடுக்க காலதாமதம் ஆகிறது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களை திறந்தவெளியில் வைத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பருவ வரத்து காலங்களில் விளைபொருட்கள் மழையில் நனைந்து வீணாகிறது. கொள்முதல் செய்த விளைப் பொருட்களை உடனுக்குடன் எடுக்க வியாபாரிகளை அறிவுறுத்த வேண்டும். போலீஸ் பூத் அமைத்து பாதுகாப்பு பணியை பலப்படுத்த வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஏ.டி.எம். எந்திரம் அமைத்துத் தர வேண்டும்.


Next Story