வைகை அணையில்4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்
வைகை அணையில் மீனவர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் கடந்த 65 ஆண்டுகளாக மீன்வளத்துறை சார்பில், மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதில் அணையை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேரடியாக மீன் பிடித்து வந்தனர். இந்நிலையில் மீன்பிடி உரிமம் கடந்த மாதம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பழைய நடைமுறைபடி பிடிக்கப்படும் மீன்களில் சரி பங்கு மீனவர்களுக்கு கொடுக்க வேண்டும், மீன்பிடி உரிமம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து கடந்த 20-ந்தேதி மீனவர்கள் வைகை அணையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிப்பதற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கிடையே அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களை கண்டறிய அதிகாரிகள், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மீனவர்களின் போராட்டம் குறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் கவுதம் வைகை அணை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், ஆபத்தான பகுதியில் பெண்கள், சிறுவர்களை தண்ணீரில் இறக்கி, தீக்குளித்து விடுவோம், தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வோம் என்று மக்களை தூண்டிவிடும் வகையில் செயல்பட்டு அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் சங்கிலி, தேனி மாவட்ட செயலாளர் பாரத் மற்றும் கட்சி நிர்வாகிகள் 6 பேர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.