ஆத்தங்கரை விடுதி ஆயிக்குளத்தை தூர்வார வேண்டும்


ஆத்தங்கரை விடுதி ஆயிக்குளத்தை   தூர்வார வேண்டும்
x

கறம்பக்குடி அருகே கடந்த 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கும் ஆத்தங்கரை விடுதி ஆயிக்குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

ஆயிக்குளம்

கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆத்தங்கரைவிடுதி கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆயிக்குளம் என்ற பாசனகுளம் உள்ளது.

இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இந்த குளம் பராமரிக்கப்படாமல் உள்ளது. குளம் தூர்வாரப்படாததால் குளத்தில் முட்புதர்கள் கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை

மேலும் இந்த குளத்துக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் குளம் நிரம்புவதே இல்லை. எனவே இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர் நிலத்தை தரிசாக வைத்து உள்ளனர்.

குளத்தில் தண்ணீர் தேங்காததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் ஆழ்குழாய் கிணற்று பாசனமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே இப்பகுதி விவசாயத்தை மேம்படுத்த ஆயிக்குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை

இதுகுறித்து ஆத்தங்கரைவிடுதி ஆயிக்குளம் பாசன விவசாயிகள் கூறுகையில், இந்த குளத்தை நம்பியே எங்கள் பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் குளம் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வரத்து வாய்க்கால் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்து கிடக்கிறது.

இந்த குளத்தை பராமரித்து தண்ணீர் நிரப்ப வழிசெய்யாவிட்டால் கோடைகாலங்களில் ஆழ்குழாய் கிணறுகளும் செயல்படாமல் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே ஆத்தங்கரை விடுதி ஆயிக்குளத்தை உடனடியாக தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story