ஆத்தராத்தமன் கோவில் கும்பாபிஷேகம்
கசிநாயக்கன்பட்டி கிராமத்தில்ஆத்தராத்தமன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பத்தூர் தாலுகா கசிநாயக்கன்பட்டி அருகே வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் ஆத்தராத்தமன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், முதல் கால பூஜை, யாகவேள்வி, பிரசாத வினியோகம் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால பூஜை, கலச பூஜை, யாகவேள்வி மற்றும் புண்ணியாஹூதி, பிரசாத வினியோகம் நடந்தது. தொடர்ந்து புனித நீர் கலசத்தை எடுத்து சென்று மாரியம்மன் கோவிலில் மூலவர் மாரியம்மன் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஊர் கவுண்டர் கே.ஜி.பூபதி, ஆர்.ஆறுமுகம், தலைமையில் பாலு குடும்பத்தின் சார்பில் தாய் வீட்டு சீதனமாக பழங்கள், இனிப்புகள், காரங்கள், தாலி சீர் வரிசைகளுடன் பம்பை, மேள தாளத்துடன் ஊர்வலமாக ஆத்தராத்தமன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அங்கு கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் விநாயகர், முருகர், பெருமாள், நாகாலம்மன், ஆத்தராத்தமன் ஆகிய சாமிகள் மீதும், கோபுர கலசம் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் அருள் வந்து ஆடினர்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்தராத்தமன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.