அத்திக்கடவு- அவினாசி திட்ட குழாயில் உடைப்பு: பீறிட்டு வெளியேறி வீணாகிய தண்ணீர்
அத்திக்கடவு- அவினாசி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் பீறிட்டு வீனானது.
சென்னிமலை அருகே அத்திக்கடவு- அவினாசி திட்ட குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணானது.
சோதனை ஓட்டம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கூத்தம்பாளையம், சின்னகாட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குட்டைகள் மற்றும் பாலதொழுவு குளத்துக்கு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
பீறிட்டு வெளியேறிய தண்ணீர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னிமலை - ஊத்துக்குளி ரோட்டில் எல்லக்காடு என்ற இடத்தில் அத்திக்கடவு- அவினாசி திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் 40 அடி உயரத்துக்கு மேல் பீறிட்டு வெளியேறியது. இதை கண்டதும், அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தார் ரோட்டில் வேகத்தடை உள்ள பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததால் வேகத்தடையை கடந்து சென்றவர்கள் அனைவரும் முழுமையாக நனைந்தபடி சென்றனர். மேலும் அந்த வழியாக ஊத்துக்குளி, சென்னிமலை சென்றவர்கள் பீய்ச்சி அடித்த தண்ணீரை கண்டு பயந்து கொண்டு மாற்றுப்பாதை வழியாக சென்றனர். சுமார் 2 மணி நேரம் தண்ணீர் பீறிட்டு ெவளியேறி வீணானது. அதன்பிறகு தானாகவே நின்று விட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.