அத்திக்கடவு -அவிநாசி திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகளை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டம்
அத்திக்கடவு -அவிநாசி திட்டமானது கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.50 டி.எம்.சி. உபரிநீராக செல்கிறது. இந்த தண்ணீரை நீரேற்று முறையில் நிலத்தடி குழாய் மூலம் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 74 ஏரிகள் மற்றும் 971 குளம்-குட்டைகளில் தண்ணீரை நிரப்பும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் முதல் -அமைச்சராக காமராஜர் இருந்த போதே திட்டமிடப்பட்டது. பின்னர் பல்வேறு காலக்கட்டங்களிலும் திட்ட ஆய்வுப்பணிகள் நடந்தன. பின்னர் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக முதலில் ரூ.1,652 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் ரூ.1,756 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் திருந்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
முதல் -அமைச்சர் ஆய்வு
அத்திக்கடவு -அவிநாசி திட்டப்பணிகளை தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இதற்காக பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டம் பாளையம், திருவாச்சி, போலநாயக்கன் பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிரே நகரில் அமைக்கப்பட்டு உள்ள எம்மாம்பூண்டி நீரேற்று நிலையத்தினை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், அங்கு நீரேற்று கட்டமைப்புகள் மற்றும் நீர்தேக்க தொட்டி, அங்கு பொருத்தப்பட்டு உள்ள எந்திரங்களை பார்வையிட்டார். அப்போது நீர்வளத்துறையை சேர்ந்த பொறியாளர்களிடம், பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
உற்சாக வரவேற்பு
இந்த ஆய்வின்போது முதல் -அமைச்சருடன் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து பெருந்துறை சரளையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, 'அத்திக்கடவு -அவிநாசி திட்ட பணிகளை நான் பார்வையிட்டேன். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்னுடன் வந்தனர். அதை பார்வையிட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அந்த பணிகளை உடனடியாக துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். நிச்சயம், உறுதியாக, விரைவில் இன்னும் சில மாதங்களில் அந்த பணிகள் நிறைவேற்றப்பட்ட உடன் நானே நேரடியாக வந்து தொடங்கி வைப்பேன் என்ற உறுதியை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்' என்றார்.
முன்னதாக காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு பெருந்துறை வரை பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.