தர்மபுரியில் தடகள விளையாட்டு போட்டிகள்-1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றன. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்றன.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டிகளை ஏலகிரி பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், விளையாட்டு ஆசிரியர் பாலசுந்தரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டி பேசினார். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.