பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்
x

வேப்பந்தட்டை, வேப்பூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

தடகள போட்டிகள்

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் குறு வட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வேப்பந்தட்டை, வேப்பூர் குறு வட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் தனித்தனியாக நடந்தது.

வேப்பந்தட்டை குறு வட்டத்திற்கு ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளும், வேப்பூர் குறு வட்டத்திற்கு ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் ஓட்டம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றது. போட்டிகளில் வேப்பந்தட்டை, வேப்பூர் குறு வட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பதக்கம்-சான்றிதழ்

போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

முதலிடம் பிடித்த வீரர்-வீராங்கனைகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வேப்பந்தட்டை குறு வட்ட அளவில் விளையாட்டு போட்டிகளுக்கான செயலாளரும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ராஜேந்திரன், இணை செயலாளர்களும், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களுமான காளிதாஸ், நடராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் வேப்பூர் குறு வட்ட விளையாட்டு போட்டிகளுக்கான செயலாளரும், பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான திருநாவுக்கரசு, இணை செயலாளர்களும், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களுமான சுப்பிரமணி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) பெரம்பலூர் குறு வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகளும், நாளை (வெள்ளிக்கிழமை) வேப்பூர் குறு வட்ட பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Next Story