ஆத்தூர் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன்
மாநில யோகா போட்டியில் ஆத்தூர் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் ஏகாத்மா யோக விஸ்வ வித்யாலயா அசோசியேசன், இந்தியன் அசோசியேசன் மற்றும் இந்தியன் அசோசியேசன் ஆப் யோகா ஆகிய அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.
போட்டியினை ஏகாத்மா யோகா விஷ்வ வித்யாலயா நிர்வாகி சங்கரி, மதுரை கெட்வெல் யோகா சென்டர் நிர்வாகி விஜய் ஈஸ்வரி, மதுரை போதிதர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி சுதா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
போட்டியில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியும், 2-வது இடத்தை ஆத்தூர் சண்முகசுந்தரம் நாடார் நர்சரி பிரைமரி பள்ளி அணியும், 3-வது இடத்தை வீரபாண்டியன் பட்டணம் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும் பெற்றன.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே. கமாலுதீன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் எம்.பி. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஷாஜகான் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஏ.கே.செல்வராஜ், சிற்பி ஆர்.எஸ். ஸ்ரீதர், மதுரை ஜி.எம். பாட்சா, எம். பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், யோகா சென்டர் நிர்வாகி ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.