ஆத்தூர்சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்


ஆத்தூர்சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பங்குனி திருவிழா

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள், சுவாமி அம்பாள், திருவீதி உலா நடைபெற்றது.

ஏழாம் திருவிழா அன்று நடராஜர் காப்பு கட்டுதல், உருகு சட்ட சேவை மற்றும் வெற்றிவேர் சப்பரப்புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிகப்பு சாத்தி நடராஜர் சிகப்பு சாத்தி புறப்பாடும், ருத்ர உருவ வழிபாடுகளும் நடைபெற்றன.

தேரோட்டம்

சிகர நிகழ்ச்சியாக நேற்று பங்குனி திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ,அலங்கார வழிபாடுகள் முடிந்து தேருக்கு எழுந்தருளினர். காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற்றது. தேரை திரளான ஆண்களும், பெண்களும் அரோகரா கோஷம் முழங்க நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.

வழிநெடுகிலும் தேரை நிறுத்தி பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் வாசனை திரவியங்கள் வைத்து அர்ச்சனை செய்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற திருத்தேர் காலை 10.25 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து ஆத்தூர் சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை நல சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் ஆத்தூர் சுற்று வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் மற்றும் வெற்றிலை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் இடபவாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழா நாட்களில் பக்தி சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், சிறப்பு மேளங்கள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.

கலந்துகொண்டவர்கள்

திருவிழாவில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ஜெயந்தி, ஆய்வர் செந்தில் நாயகி,ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமாலுதீன், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி. சதீஷ்குமார், ஆத்தூர் குளம் கிழ்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சி.பி.செல்வம், ஆத்தூர் சுற்று வட்டார தேவேந்திர குல உறவின்முறை சங்க தலைவர் பா. ராஜேந்திரன், முன்னாள் கோவில் அறங்காவலர்கள் வி. ஏ.வி.அண்ணாமலை சுப்பிரமணியம், மூக்கன் சுவாமி, காசி, கோவில் ஆஸ்தான ஸ்தபதி ஆர்.எஸ். ஸ்ரீதர், ஆத்தூர் சைவ வேளாளர் அபிவிருத்தி சங்கத் தலைவர் இ.ஆண்டியப்பன், செயலாளர்கார்த்திகேயன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் அசோக் சொப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை அமைப்பாளர் வி. சுப்பிரமணியம், ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் பி. சுப்பையா, ஆத்தூர் சுற்று வட்டார நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.கே.செல்வராஜ் நாடார், ஆத்தூர் நிர்வாக அதிகாரி முருகன், சுகாதார ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story