ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 பேர் கோர்ட்டில் ஆஜர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தனர். மேலும் மீண்டும் அரியானாவிற்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 2 பேரை போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தனர். மேலும் மீண்டும் அரியானாவிற்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அரியானா மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு கொள்ளை கும்பல் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களை போலீசார் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டில் ஆஜர்
அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதி திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் திருவண்ணாமலை டவுன் போலீசார் சார்பில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமரி ஆரிப், ஆஜாத் ஆகிய இருவரையும் ஆஜர்படுத்தி 7 நாட்கள் போலீசார் காவலில் எடுத்தனர்.
போலீசார் காவல் விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் இருவரையும் மீண்டும் இன்று திருவண்ணாமலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.
மேலும் அவர்கள் இருவரையும் போளூர் வழக்கு தொடர்பாக மீண்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனுத்தாக்கல் செய்தனர்.
அதுமட்டுமின்றி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் மேலும் கைது செய்யப்பட்டு உள்ள 2 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசார் காவலில் எடுத்து மனு தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் அரியானாவிற்கு...
ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
முகமது ஆரிப்பின் உறவினர் வங்கி தொடர்புடைய வேலை செய்து வருவதால் அவர் ஏ.டி.எம். எந்திரங்கள் குறித்து உறவினர் மூலம் நன்கு அறிந்து உள்ளார்.
பின்னர் அவர்கள் திருட்டு காரில் வந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்து பணத்தை கொள்ளையடித்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு சென்று உள்ளனர். மேலும் அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் தடயங்களை அழிப்பதற்காக எரித்து உள்ளனர்.
பின்னர் அவர்கள் கோலார் பகுதியில் இருந்து அரியானா மாநிலத்திற்கு கன்டெய்னர் லாரி மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்றுள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் அரியானா சென்றுள்ளனர்.
மேலும் விசாரணையில் கொள்ளையடிக்கவும், பணத்தை இடமாற்றம் செய்யவும் திட்டம் தீட்டி கொடுத்த நபர் கோலார் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் கிடைக்க தகவலின் பேரில் மற்றொரு தனிப்படை போலீசார் கோலார் பகுதிக்கு சென்று உள்ளனர்.
அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டினரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாலை சந்திக்கும் போலீசார்
மேலும் மற்றொரு தரப்பு போலீசார் கூறுகையில், காவலில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்கள் நாங்கள் எந்த ஏ.டி.எம். மையங்களிலும் கொள்ளையடிக்கவில்லை என்று "நான் அவன் இல்லை" என்ற படத்தின் பாணியில் திரும்ப, திரும்ப அவர்கள் எங்களுக்கு அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பணத்தை பங்கு பிரித்து கொண்டு தனித்தனியாக சென்று விட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதிலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்வதிலும் போலீசார் பெரும் சவாலை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.