ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் வேலூர் சிறையில் அடைப்பு


ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் வேலூர் சிறையில் அடைப்பு
x

திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கைவரிசை காட்டிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை நகரில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் 2 ஏ.டி.எம். மையங்களிலும், போளூர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தொடர் கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 6-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் போலீசாருக்கு கிடைத்த அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் இதுபோன்று பிற மாநிலங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களை ஒப்பிட்டு விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளையில் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

8 பேரிடம் விசாரணை

கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் கோலார் (கே.ஜி.எப்.) பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலைக்கு வந்து கண்காணித்து இருக்கிறார்கள்.

அதன்பிறகு கொள்ளையை அரங்கேற்றிவிட்டு காரில் கோலார் பகுதிக்கு தப்பி சென்று இருக்கிறார்கள்.

போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கும், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் குஜராத்திற்கும், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடகாவிற்கும், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ்கல்யாண் தலைமையிலான தனிப்படையினர் ஆந்திர மாநிலத்திற்கும் சென்றனர்.

தனிப்படை போலீசார் கோலார் பகுதியில் 2 பேரையும், குஜராத்தில் 6 பேரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியானாவில் 2 பேர் கைது

கர்நாடகா மாநிலத்திற்கு தனிப்படை வந்த தகவல் அறிந்த கொள்ளையர்களில் 2 பேர் கோலார் பகுதியில் இருந்து பெங்களூரு சென்று விமானம் மூலம் அரியானாவிற்கு தப்பிச் சென்றனர்.

ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர், அரியானா மாநில போலீசார் உதவியுடன் அவர்களை சுற்றி வளைத்தனர்.

அங்கு மேவாட் என்ற பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப் (வயது 35) மற்றும் ஆசாத் (37) ஆகிய 2 பேரையும் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேருடன் போலீசார் நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அவர்களை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு அவர்கள் இருவரையும் போலீசார் திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் கோர்ட்டு எண்-1 மாஜிஸ்திரேட்டு கே.கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் வேனில் அழைத்து சென்று பகல் 2.30 மணிக்கு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.70 லட்சத்தை எங்கு பதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்காக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.


Next Story