பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு-ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்-பொதுமக்கள், வங்கி அதிகாரி கருத்து


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:16:41+05:30)
தர்மபுரி

ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர்தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும்.

'அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு.

சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.

காலம் மாறியது

இப்போது காலம் மாறிவிட்டது. கடன், சேமிப்பு, அரசு உதவித்தொகை, ஓய்வு ஊதியம் என்று பெரும்பாலான பணிகளுக்கு மக்கள் வங்கிகளின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டார்கள். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியாக வங்கிச் சேவை கிடைக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளரிடம் காட்டுகின்ற கனிவு, வேலையில் துரிதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைப்பது இல்லை. உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அதை எடுக்க வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டும்.

'ஏ.டி.எம்.' என்கிற தானியங்கி எந்திரம் அறிமுகமான பிறகு அந்த நிலை மாறி வந்தது. இருந்தாலும் அதன் சேவைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகள் குறித்தும் வங்கிகளின் சேவைகள் குறித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வங்கிகளே நிரப்பவேண்டும்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ கூறியதாவது:-

ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியில் வங்கி ஊழியர்கள்தான் முதலில் ஈடுபட்டனர். அப்போது எந்தப்பிரச்சினையும் ஏற்படவில்லை. காலப்போக்கில் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணி முழுவதும் தனியார் வசம் சென்றுவிட்டது. இதனால்தான் தற்போது பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. நம் நாட்டில் பல வகையான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் வைக்கும் முறையில் அளவு மாறுபடும். பொதுவாக சில ஏ.டி.எம்.களில் ரூ.40 லட்சம் வரை வைக்க முடியும்.

ஆனால் ரிசர்வ் வங்கி கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டு வெறும் 1.65 சதவீதம் மட்டுமே புழக்கதில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால் வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு இல்லாததால் ரூ.40 லட்சம் கொள்ளளவு கொண்ட ஏ.டி.எம்.களில் வெறும் ரூ.20 லட்சம்தான் வைக்க முடிகிறது. அதேபோல் ரிசர்வ் வங்கியும், வங்கிகளுக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்றால்தான் ரிசர்வ் வங்கிக்கு புகார் செல்லும். ஆனால் தொழில்நுட்ப கோளாறு என்று ஏ.டி.எம். எந்திரங்களில் குறுஞ்செய்தி வரும் வகையில் மாற்றி வைத்து கொள்கின்றனர். பொதுமக்களுக்கு ஏ.டி.எம்.கள் மூலம் முழுமையான சேவை அளிக்க வங்கி நிர்வாகங்கள் விரும்பினால், மீண்டும் ஏ.டி.எம்.களில் வங்கி ஊழியர்களை பணம் நிரப்பும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

உடனடியாக நிரப்ப வேண்டும்

ஏரியூரை சேர்ந்த தொழில் முனைவோர் குமார்:-

நவீன தொழில்நுட்பம் காரணமாக நடைமுறைக்கு வந்துள்ள 'ஜிபே', 'போன்பே', 'பே.டி.எம்.' உள்ளிட்ட ஆன்லைன் பண பரிமாற்ற முறையை, படித்தவர்கள் தொழில்களில் ஈடுபடுபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களைத்தான் முழுமையாக நம்பி இருக்கிறார்கள். பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு பணம் அதிகம் தேவைப்படும். அந்த சமயங்களில் பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. ஏ.டி.எம். மையங்களில் தொடர்ச்சியாக பணம் இல்லாமல் இருந்தால் அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வங்கிகள் தங்களின்கீழ் உள்ள ஏ.டி.எம்.களை கண்காணித்து பணம் தீர்ந்து விட்டால் உடனடியாக நிரப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஏ.டி.எம். மையங்களையே பணம் எடுக்க நம்பி இருப்பதால் தேவையுள்ள இடங்களில் கூடுதல் ஏ.டி.எம். மையங்களை அமைக்க வேண்டும்.

தொழில்நுட்ப கோளாறு

மொரப்பூரை சேர்ந்த இல்லத்தரசி சுகந்தி பிரபாகரன்:-

கிராமப்புற பகுதிகளில் வங்கி சேவை மிகவும் குறைவாக உள்ளது. இந்த பகுதிகளில் செயல்படும் சில ஏ.டி.எம். மையங்களிலும் பெரும்பாலான நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அங்கு பணம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் ஏ.டி.எம். மையங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க பல நாட்கள் ஆகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே கிராமப்புற பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேவை உள்ள இடங்களில் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகங்கள் தங்கள் ஏ.டி.எம்.களை முறையாக பராமரிக்க வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறை

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நகர கூட்டுறவு வங்கி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செந்தில்வேலன்:-

ஏ.டி.எம். எந்திரங்கள் தொடக்க காலத்தில் அந்தந்த வங்கி நிர்வாகங்கள் மூலம் செயல்பட்டு வந்தன. அப்போது தேவை அடிப்படையில் கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டன. இந்தநிலையில் ஏ.டி.எம். எந்திரங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பும் பணி அவுட்சோர்சிங் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணி தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது வங்கிகளில் பணியாளர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. வங்கிகளில் கூடுதல் பணியாளர்களை நியமித்தால் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிப்பும் பணி மற்றும் நிர்வகிக்கும் பணியை வங்கி பணியாளர்களே மேற்கொள்ள தயாராக உள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

24 மணி நேரமும் பணம்

சமூக ஆர்வலர் பாபு:-

கடந்த சில ஆண்டுகளில் வங்கி சேவை மிகப்பெரிய அளவில் விரிவடைந்து விட்டது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என அனைத்து தரப்பினருக்கும் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான ஊதியம், நிதி பரிமாற்றம் வங்கி கணக்கு மூலமே நடைபெறுகிறது. இவ்வாறு வங்கி சேவை பரவலாக்கப்பட்ட நிலையில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் விரிவு படுத்த வேண்டும். ஆனால் வங்கி பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.எம். மையங்கள் பொதுமக்களுக்கு தேவையான அளவில் திறக்கப்படவில்லை. பயன்பாட்டில் உள்ள ஏ.டி.எம். மையங்களும் முழுமையாக செயல்படவில்லை. இதற்கு தீர்வு காண நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கூடுதலாக ஏ.டி.எம். மையங்களை அமைக்க வேண்டும். அவற்றில் 24 மணி நேரமும் பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விரைவாக தீர்வு காண வேண்டும்

மாரண்டஅள்ளியை சேர்ந்த நாகராஜ்:-

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாதாரண மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களையே நம்பி உள்ளனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதில்லை. இதனால் வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும் தேவைப்படும் நேரத்தில் அதை எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பண்டிகை காலங்களில் நிலைமை மேலும் மோசமடைகிறது. இதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள பணத்தை அனுப்பும் ஏ.டி.எம். மையங்களும் சரிவர செயல்படுவதில்லை. தனியார் வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுக்கும்போது அதற்கு குறிப்பிட்ட தொகை சேவை கட்டணமாக பிடிக்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் சரியாக செயல்படாததால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வங்கி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் உள்ளதா? என்று வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை இயக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லாதபோது பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் நடத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் ஒரு மாதத்துக்கு பணம் இல்லாமல் எவ்வளவு நேரம் இருந்தன? என்பது பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒரு சில வங்கிகளில் மட்டுமே ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமல் ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. இத்தகைய பரிவர்த்தனைகளின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். எனவே அனைத்து வங்கிகளுக்கும் இதனை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story