ஏ.டி.எம்.மையத்தின் கண்ணாடி உடைப்பு


ஏ.டி.எம்.மையத்தின் கண்ணாடி உடைப்பு
x
திருப்பூர்


உடுமலையில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஏ.டி.எம்.மையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

கண்ணாடி உடைப்பு

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பசுபதி வீதியில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு பயிர் மற்றும் நகை கடன், நீண்ட, மத்திய, குறுகிய காலக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கியின் வளாகத்தில் பொதுமக்கள் பயன் பெரும் வகையில் ஏ.டி.எம். மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்த சூழலில் அலுவலகப் பணிகள் முடிவடைந்து பின்பு அதிகாரிகள் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது ஏ.டி.எம் மையத்தின் கண்ணாடி மர்ம ஆசாமிகளால் உடைக்கப்பட்டு இருந்தது தெரிகிறது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்தின் சார்பில் உடுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஏ.டி.எம்.மையத்தின் கண்ணாடிகளை உடைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை

இதுகுறித்து சமூக அலுவலர்கள் கூறியதாவது:-

வங்கிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் நிறைந்து பரபரப்புடன் காணப்படும் பசுபதி வீதியில் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடை பாருடன் செயல்பட்டு வருகிறது.

இங்கு வருகை வருகின்ற நபர்கள் போதை தலைக்கு ஏறியவுடன் சாலையின் குறுக்காக அங்கும் இங்கும் ஓடுவது, வாகனங்களை வழிமறிப்பது, பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பது, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல்

இதனால் அந்த வழியாக செல்கின்ற பெண்கள், பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. இதையடுத்து கடையை அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் பலன் இல்லை.

இந்த சம்பவத்திற்கு பின்பாவது பசுபதி வீதியில் செயல்பட்டு வருகின்ற டாஸ்மாக் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story