பரவையில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயற்சி - அபாய மணி ஒலித்ததால் ஆசாமி தப்பி ஓட்டம்


பரவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமி திருட முயற்சித்த போது அபாய மணி ஒலித்ததால் தப்பி ஓடினான்.

மதுரை

வாடிப்பட்டி,

பரவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம ஆசாமி திருட முயற்சித்த போது அபாய மணி ஒலித்ததால் தப்பி ஓடினான்.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

மதுரை மாவட்டம் பரவை மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அந்த ஏ.டி.எம். எந்திரம் இருக்கும் அறைக்குள் முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து தலைக்கவசத்துடன் 30 வயது மதிக்கத்தக்க மர்மநபர் உள்ளே சென்றார்.

அவர் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ள கீ போர்டை கைகளால் அடித்தார். அதன் கீழே இருந்த கதவு பகுதியை கழற்ற முயற்சித்தார்.அப்போது திடீரென்று அபாய மணி ஒலிக்கவே அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றார். அதன்பின் வெளியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர் வேகமாக இருட்டுக்குள் மாயமாய் மறைந்தார்.

போலீஸ் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதி மற்றும் அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மேலும் தடய வியல் நிபுணர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story