மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி. ஊழியரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து மோசடி செய்ய முயற்சி வாலிபர் கைது; 13 போலி கார்டுகள் பறிமுதல்
மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி. ஊழியரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து மோசடி செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 13 போலி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மந்தாரக்குப்பம்,
என்.எல்.சி. ஊழியர்
விருத்தாசலம் சமுட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 60). நெய்வேலி நிலக்கரி சுரங்கம்-2 சொசைட்டியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை பணம் எடுப்பதற்காக மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அவர், அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். உடனே ஏ.டி.எம். கார்டை பெற்றுக் கொண்ட அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை பயன்படுத்துவபோல் பாவனை செய்ததுடன் போலியான ஏ.டி.எம். கார்டை நடராஜனிடம் கொடுத்துள்ளார்.
வாலிபர் கைது
கார்டை பெற்ற நடராஜன் அதில் தனது பெயர் இல்லையே என அந்த வாலிபரிடம் கேட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த நடராஜன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை விரட்டி பிடித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் பகுதியை சேர்ந்த குணசேகர் மகன் வினோத்குமார்(30) என்பதும், ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை குறி வைத்து அவர்களுக்கு பணம் எடுத்து தர உதவி செய்வதுபோல் நடித்து போலி ஏ.டி.எம். கார்டுகளை மாற்றிக் கொடுத்து பணத்தை அபேஸ் செய்து வருவதும் தெரியவந்தது. தற்போது நடராஜனிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து மோசடி செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வினோத்குமாரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து போலியான 13 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்தனர்.