ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்த முயற்சி -போலீசார் விசாரணை


ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்த முயற்சி -போலீசார் விசாரணை
x

திருவான்மியூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ள நோட்டுகளை செலுத்த முயற்சி போலீசார் விசாரணை.

சென்னை,

சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் மந்தைவெளி பகுதியை சேர்ந்த கர்ணன் (வயது 43) காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், காவலாளி கர்ணனிடம், 'நான் ஆஸ்பத்திரிக்கு அவசரமாக செல்ல வேண்டும். எனவே நான் தரும் பணத்தை இந்த கணக்கில் (அக்கவுண்ட் நம்பர்) 'டெபாசிட்' செய்து விடுங்கள் என்று கூறி ரூ.2,000 நோட்டு 3, ரூ.500 நோட்டு 4 என ரூ.8 ஆயிரத்தை பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் அந்த பணத்தை கர்ணன் 'டெபாசிட்' செய்ய முயன்றார். ஆனால் அந்த பணத்தை எந்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அந்த பணத்தை வங்கி ஊழியர்களிடம் கர்ணன் ஒப்படைத்து நடந்த விவரத்தை கூறினார். வங்கி ஊழியர்கள் அந்த பணத்தை வாங்கி சோதனை செய்தபோது அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கள்ளநோட்டுகளை ஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்த முயன்ற நபரை தேடி வருகின்றனர்.


Next Story