தென்தாமரைகுளம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
தென்தாமரைகுளம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஏ.டி.எம். மையம்
தென்தாமரை குளம் அருகே உள்ள கீழமணக்குடியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கடைகளை உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒரு மர்ம நபர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றார். அவர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும் பகுதியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியாக ஒரு கம்பியால் நெம்பி உள்ளார். மேலும் அங்கிருந்த கேமரா, மானிட்டர் ஆகியவற்றையும் உடைத்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சி நடந்து இருப்பதை பார்த்து தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.