ஓமலூர் அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ரோந்து போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 2 பேர் கைது
ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் ரோந்து போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சிசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் இந்தியா பேங்க் ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அங்கு அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்று கொண்டிருந்தனர்.
அப்போது தீவட்டிப்பட்டி பெண் போலீசார் தெய்வ ராணி, நர்மதா ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து வந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் 3 பேரும் தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். மற்றொருவர் ஊருக்குள் புகுந்து தப்பி சென்றுள்ளார்.
2 பேர் கைது
இதுபற்றி ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசார், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, கருப்பண்ணன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்த விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்றவர்களில் 2 பேர், ஏற்காடு கொளக்கூர் பகுதியை சேர்ந்த மணி மகன் லட்சுமணன் (வயது 28), சேலம் குகை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்த (22) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பிய ஓடிய மற்றொரு நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஓமலூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.