பூதப்பாண்டி அருகே ஏ.டி.எம். காவலாளி டெம்போ மோதி சாவு
பூதப்பாண்டி அருகே டெம்போ மோதி ஏ.டி.எம். காவலாளி பரிதாபமாக பலியானார்.
அழகியபாண்டியபுரம்
பூதப்பாண்டி அருகே டெம்போ மோதி ஏ.டி.எம். காவலாளி பரிதாபமாக பலியானார்.
ஏ.டி.எம். காவலாளி
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் சிவதாணு (வயது 52). இவர் தக்கலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.ல் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவர் நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். அவர் வீரநாராயணமங்கலம்-இறச்சகுளம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
வாகனம் மோதியது
வீரநாராயணமங்கலம் பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிவ தாணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சிவதாணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிவதாணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் தப்பியோட்டம்
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, புத்தேரி பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் ஒரு டெம்போ நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று டெம்போவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது, காவலாளி சிவதாணுவின் மீது மோதிய டெம்போ என்பதும், விபத்து நடந்ததும் டெம்போவை அங்கு நிறுத்தி விட்டு டிரைவர் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து தப்பிச் சென்ற டிரைவரை தேடி வருகிறார்கள்.