மானாமதுரையில் ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
மானாமதுரையில் ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். பிரதான சாலையில் இருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பணம் எடுத்து செல்வார்கள். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியை அந்த நபர் உடைத்தார். ஆனால் முழுமையாக உடைக்க முடியவில்லை. இதற்கிடையில் அந்த வங்கியின் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்த கேமராவில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சி வருவதை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மானாமதுரை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது. இந்த சம்பவம் மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.