சேலத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி?-போலீசார் விசாரணை
சேலத்தில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் அம்மாபேட்டை புதுத்தெருவில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஏ.டி.எம். மையத்தை சென்று பார்வையிட்டார். இதில் ஏ.டி.எம். எந்திரத்தின் டிஸ்பிளேவில் உள்ள கண்ணாடி உள்ளே தள்ளிய நிலையில் இருந்தது.
இதனால் இந்த ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி ஏதும் நடந்ததா? என போலீசார் சந்தேகித்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகளும் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டு இருந்த பணம் திருட்டு போகவில்லை என்பது உறுதியானது. இருப்பினும் கண்ணாடி டிஸ்பிளே வழியாக பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.